மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் மீது எறிகணை வீச்சு - தொடரும் இடப்பெயர்வு அவலம் January 12, 2009
இடம்பெயர்ந்த மக்கள் மிகச் செறிவாக வாழும் பகுதிகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணைகளை வகைதொகையின்றி வீசுவதால் வன்னியில் மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர். பலதடவைகள் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து உடலாலும் உள்ளத்தாலும் அலுத்துப்போய் இருக்கின்ற மக்கள் ஒரு சில கிலோ மீற்றர்கள் பரப்புள்ள குறுகிய பகுதிக்குள் குவிந்து வருகின்றனர். இதனால் தங்கிடமின்றி வீதியோரங்களிலும் பொது இடங்களிலும் வானமே கூரையாக தங்கியிருக்கின்றனர்.
ஏ-35 சாலையில் இடம்பெயரும் மக்களின் வாகனங்கள் தொடர்ச்சியாகப் பயணிப்பதாலும் அவற்றுள் பல விபத்துக்களுக்கு உள்ளாகி வீதியோரங்களிலும் வீதிக்குக் குறுக்காவும் நிற்பதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் உருவாகியுள்ளது. சில கிலோமீற்றர்கள் பயணம் செய்ய மணிக்கணக்கான நேரம் செலவிடப்படவேண்டிய நிலைமை காணப்படுகிறது. இதனால் எறிகணை வீச்சு, விமானக்குண்டு வீச்சுக்களால் காயமடையும் பொதுமக்களை மருத்துவமனைகளுக்கு எடுத்துச்செல்லும் அம்புலன்ஸ் வண்டிகளின் நகர்வும் தடங்கலுக்குள்ளாகிறது.
ஜனவரி 11ஆம் திகதியன்று மட்டும் படையினர் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதல்களினால் ஒரு பெண்மணி பலியானார். பல சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர் தாக்குதல்களினால் வைத்தியசாலைகளும் இடம்பெயர்ந்து செல்லுகின்ற நேரத்தில் காயமடைந்த மக்களுக்கான சிகிச்சை என்பதே ஒரு சிக்கலான விடயமாக மாறிவருகிறது.
அத்தோடு இடம்பெயரும் மக்கள் தொழில்வாய்ப்போ வருமான மூலங்களோ இல்லாமல் வெறுமனே உலக உணவுத்திட்டத்தின் உலர் உணவு நிவாரணத்தில் மட்டும் தங்கியிருக்கும் அவலநிலை உருவாகிவிட்டது. நிவாரணங்கள் வழங்கப்படும் கூட்டுறவுச் சங்கக் கிளைகளும் இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருப்பதால் அந்த நிவாரணத்தைக் கூடப் பெற முடியாமல் மக்கள் பசி,பட்டினியால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
சங்கதி - 12.01.2009 |