 முரசுமோட்டை மற்றும் மூன்றாம் கட்டை பகுதி மக்கள் இடம்பெயர்வு. January 1, 2009
கிளிநொச்சி மாவட்டம் முரசுமோட்டை மற்றும் மூன்றாம் கட்டை பகுதி்களில் இடம்பெற்று வருகின்ற இராணுவத்தி்ன் தொடர்ச்சி்யான எறிகணை தாக்குதல்கள் விமானத் தாக்குதல்கள் காரணமாக இந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பு தேடி இடம்பெயர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது,
கடந்த சில தினங்களாக இந்தப் பகுதியில் இடம்பெற்ற எறிகணை தாக்குதல்களையடுத்து, புதன்கிழமை காலை விமானத் தாக்குதல்களும் முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்றதுடன், இந்தத் தாக்குதலில் 4 பொதுமக்கள் உயிரிழந்தார்கள் என்பதும், 18 பேர் காயமடைந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விமானத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் பெண் ஒருவருக்கு கடும் காயம் காரணமாக கால் ஒன்று அகற்றப்பட்டதுடன் வயிற்றிலும் உடலிலும் படுகாயமடைந்தவர்கள் சிலரும் தர்மபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
படுகாயமடைந்தவர்களுக்கு அவசரமாக இரத்தம் தேவைப்பட்டதாகவும், வைத்தியசாலையில் இரத்தம் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் பொதுமக்களின் உதவி கோரப்பட்டது என்றும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரீ.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
முரசுமோட்டை மற்றும் மூன்றாம் கட்டை பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் கல்லாறு பகுதிக்கு பாதுகாப்பு தேடிச் சென்று கொண்டிருப்பதாகவும், தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பிரதேசம் இடம்பெயர்ந்த மக்களினால் நிறைந்து வழிவதனால், பல குடும்பங்கள் வீதியோரங்களிலும், வயல்வெளிகள் பொது இடங்களிலும் தற்காலிகக் கொட்டில்களை அமைத்து தங்கியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீரகேசரி – 01.01.2009 |